எண் பெயர் #கட்டியங்காரன் புத்தக வெளியீடு |
பதிப்புத் தொழிலுக்கு வரும்வரை என்னுடைய வாசிப்பு அதிகபட்சமாக ஆங்கிலத்தில்தான் இருந்தது. மைலாப்பூரில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ கமலஹாசன், மணிரத்னம், சுஜாதா ஆகிய மூவரின் தீவிர ரசிகனாக நான் இருந்த காலகட்டம் அது. இன்ஃபோசிஸ் வலைப்பூக்களில் எழுதும்போதுதான் வெவ்வேறு ஊர்கள், வாசிப்புப் பின்புலம், சினிமா\அரசியல் பார்வை உள்ளவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. மதுரையிலிருந்து வந்த அவநி அரவிந்தனின் நட்பு அங்குதான் தொடங்கியது. அவனுடைய சிறுகதைத் தொகுப்பை நிச்சயம் ஒரு நாள் வெளியிடுவேன்.
கல்லூரி நண்பர்கள் கார்த்திக், ஸ்ரீநிவாஸ்,
நான் ஆகிய மூவரும் சேர்ந்து நண்பன் என்ற பெயரில் எழுதிய முதல்
சிறுகதைத் தொகுப்பை பாலு மஹேந்திராவின் மாணவர் பாலா படித்துவிட்டுப் பாராட்டினார். அப்பாவை ஒரு நாள் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்
என்றார். டிசம்பர் 2013 தலைமுறைகள்
வெளியானது. அவரைச் சந்திக்கும் முன்னால் இன்னும் எங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ள
வேண்டும், ஒரு புத்தகமாவது
பெயர் சொல்லும் அளவிற்கு எழுதிவிட வேண்டும் என்று எங்களுக்குத் தோன்றியதால் நாங்கள் மீண்டும் அவரைத் தொடர்புகொள்வதைத்
தவிர்த்துக்கொண்டே வந்தோம். 2014 பிப்ரவரி பாலு
மஹேந்திராவின் மறைவு எங்களை உலுக்கியது. எப்படி ஒரு வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறோம்
என்று அப்போதுதான் புரிந்தது.
புதிய பார்வை இதழில் தொகுப்பில் இருந்து காளான் சூப் கதையைப் பாராட்டி விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது. ஐயா சுபவீ கலடியாஸ்கோப் கதையை நாங்கள் சிந்திக்காத கோணத்தில் கலைஞர் தொலைக்காட்சி ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சியில் பேசியிருந்தார். பூ சசி எங்களை நேரில் சந்திக்க அழைத்திருந்தார். ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவ மச்சான் என்ற கார் திருட்டு பற்றிய விருவிருப்பான கதை அவரை வெகுவாகக் கவர்ந்திருந்தது, ஆண் பாவம் மற்றும் இப்படிக்கு காதல் எங்கள் வயதைப் பிரதிபலிப்பதாகச் சொன்னார். தொடர்ந்து எங்களை வாழ்க்கை அனுபவத்திலிருந்து கதைகள் எழுதச்சொல்லி உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தவர் சசி சார்தான்.
அய்யா திரு பூங்கொடி சுப்பையா முன்னிலையில் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு : சிக்ஸ்த்சென்ஸ் அரங்கு |
’இது உங்க டைரியா பாருங்க’ என்ற அந்த சிறுகதைத் தொகுப்பு முதல் பதிப்பு 1000 படிகள் ஒரு வருடத்தில் விற்று மறுபதிப்பு வந்தது. இது ஒரு பெரிய மயில்க்கல் என்று எங்களுக்கு அப்போது புரியவில்லை. ஒரு வலைப்பூ எழுத்தாளர், நிறைய இலக்கிய வட்ட தொடர்புகள் உடையவர் எழுதிய விமர்சனம் என்னை பாதித்தது. பதிப்பாளரின் மகன் என்பதால் இவருக்கெல்லாம் எளிதாக முதல் புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. டைரி என்று சொல்லும் அளவிற்கு அந்தத் தொகுப்பில் ஒன்றுமில்லை என்று தாளித்துவிட்டார். அழகன் படத்தில் வரும் உப்மா வசனத்தை ஒரு கதையில் மேற்கோள் காட்டியிருந்தோம் அதையே புத்தகத்தைப் பற்றிய மதிப்பீடாகவும் அவர் எழுதியிருந்தார். இன்று படித்தாலும் தொகுப்பு பிடித்து இருந்ததைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறாரோ என்று சில சமயம் தோன்றும்.
நாஸ்டிரடாமஸ் பற்றிய ஒரு புத்தகத்தை நண்பர்கள்
சேர்ந்து எழுதினோம். புத்தகம் ஹிட். அடுத்த
புத்தகம் எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்பொழுது சசி சார்தான்
இல்லுமினாட்டிகளைப் பற்றி குறிப்பிட்டார். அது தொடர்பான வேலைகளில்
உடனே இறங்கினோம். எப்படி 2012ல் உலகம் அழியும்
என்று நாஸ்டிரடாமஸ் ஆரூடம் கூறியதை மறுக்கும் விதமாக மர்மயோகி வெளியானதோ அதேபோல் ஜல்லிக்கட்டு
போராட்டத்திற்கு முன்னால் இல்லுமினாட்டி வெளியாகி சக்கை போடு போட்டது. இன்று சினிமா பாட்டில் வரும் விளையாட்டான வார்த்தையாக அது ஆகிவிட்டது.
நாங்கள் பார்க்க முயன்ற மற்றொரு ஜாம்பவான்
பாலச்சந்தர். டிசம்பர் 2014 கே.பியின்
மறைவு மேலும் எங்களைத் துயரில் ஆழ்த்தியது. ஆனால் ஏதோ ஒரு விதத்தில்
அவருடைய ஆசிகள் எங்களைக் கவிதாலயாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள உதவியது.
அவர்களுக்காக வெப் சீரிஸ் எழுதும் வேலைகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது.
டைரியை அடுத்து மூன்று சிக்ஸர்கள் |
கே. பியின் சரிதையை அடுத்து அவரது நாடகங்களின் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு ஒரு பதிப்பாளனாக பெரிய அடையாளம். அந்தப் புத்தகத்தை நன்னிலத்தில் கமலஹாசன் வெளியிட, மணிரத்னம் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தவிர்க்க முடியாத காரணங்களால் கமல் கடைசி நேரத்தில் வரவில்லை. மணி சார் வெளியிட வைரமுத்து அவர்கள் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். கே.பியின் நூற்றுக்கணக்கான கலை வாரிசுகளும், லட்சோபலட்ச ரசிகர்களும் புத்தகங்களை வாங்கிக் குவித்துவிடுவார்கள் என்று நினைத்தேன். அன்றிலிருந்து எனக்கு நிதர்சனம் புரிய ஆரம்பித்தது.
2012 நவம்பரில் பரத்வாஜ் ரங்கன் எழுதி பென்குயின்
வெளியீடாக வரவிருக்கும் Conversations with Mani Rathnam புத்தகத்தை
முன்பதிவு செய்த கையோடு அந்த பேரில் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியிருந்தேன்.
அப்படிப்பட்டவனுக்கு நான் பதிப்பிக்கும் ஒரு புத்தகத்தை அவரே வெளியிடுகிறார்
என்பது எவ்வளவு பெரிய பேறு. 2013ல் புத்தகம் வெளியான பின் தொடங்கப்பட்ட
Mani Rathnam - The Guru பக்கம் நான் தொடங்கிய பக்கத்தைவிட வேகமாக வளர்ந்தது.
காரணம் அதன் அட்மின் சுஹான்ஸிட் ஸ்ரீகாந்த் எழுதிய ரசனையான பதிவுகள்.
இன்று விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்ற பெயரில் அவர் ஒரு குறும்பட இயக்குநர்.
நன்னிலத்தில் கே.பி சிலை திறப்பு : நூல் வெளியீடு |
இடையில் ஜூடோ ரத்தினத்தின் பெயரன் நாராயணன் திரை இயக்கம் பயில்வதற்காக லண்டன் சென்றான். அவன் வந்ததும் நாளையை இயக்குநரில் கலந்துகொள்வது. அதற்குள் தொகுப்பில் இருக்கும் கதைகள் போக சில கதைகளை எழுதிவைப்பது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மணிரத்னத்திடன் உதவி இயக்குநராக அவன் சேர்வது. அவனோடு நாங்களும் தொற்றிக்கொள்வது. இப்படி பல கனவுகளுடன்தான் ஐ.டி துறையை விட்டு நான் முதலில் வந்தேன். ஆனால் நாராயணன் குடும்ப சூழல் காரணமாக அங்கேயே செட்டில் ஆகிவிட மற்ற இரண்டு நண்பர்களும் வேலையை விடவில்லை. 2014-2018 நான் முழு நேரம் பதிப்பிப்பதிலும், படிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தினேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் படித்த, பதிப்பித்த புத்தகங்கள், பழகிய ஆளுமைகள் ஏற்படுத்திய தாக்கம் என்னுடைய சினிமா\இலக்கியப் பார்வையை மாற்றின. தொ. ப, எம். எஸ். எஸ். பாண்டியன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற ஆளுமைகளை வாசிக்க ஆரம்பித்ததும் இதற்கு ஒரு காரணம்.
மறுகதவு திறந்தது. பட்டுக்கோட்டை பிரபாகருடைய
மருமகன் ஷ்யாம் என் பள்ளித் தோழன். அவன் வழியாக அவருடைய புத்தகங்களைப்
பதிப்பிக்க ஆரம்பித்து என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து அவர்களுடைய கதை விவாதங்களில் பங்கெடுத்துக்கொள்ளும்வரை
சென்றது. அங்குதான் இயக்குநர் மணிபாரதி எனக்கு அறிமுகமானார்.
விவாத இடைவெளிகளிலும் ஓய்வு எடுக்காமல் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டே
இருக்கும் அவர் முதல் படத்தை (அன்பே அன்பே) ஏவிஎம் தயாரித்தது. அடுத்தடுத்து 2 தோல்விகளுக்குப் பின்னும் துவண்டுவிடாமல் சின்னத்திரையில் காலூன்றிவிட்டார்.
ஒரு கம் பேக்குக்காக போராடிக்கொண்டிருந்தார். சமீபத்தில்
அவர் இயக்கிய பேட்டரி பெரிய படங்களுக்கு நிகரான தரத்தில் எடுத்திருந்தார். மணிரத்னம், வசந்த், லிங்குசாமி,
ஹரி என்று ஒவ்வொரு இயக்குநரிடம் வேலை பார்த்த அனுபவத்தை அவர் பகிர்ந்துகொள்வார்.
சினிமா வட்டங்களில் மட்டுமே தெரியும் பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் சொல்லும்போது
திகைப்பாக இருக்கும்.
பி.கே.பி சார் எழுதிய ஆகாயத்தில் பூகம்பம் |
பிகேபி சார் எழுதிய ஆகாயத்தில் பூகம்பம் நூலை வெளியிட இயக்குநர் ஷங்கர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தோம். நாங்கள் எங்களுடைய புதிய பதிப்பு பொன்னியின் செல்வனை(பத்மவாசன் ஓவியங்களுடன்) அவருக்குக் கான்பிக்க எடுத்துச் சென்றிருந்தோம். அப்போது அவர் 2.0 படப்பிடிப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தார். சுஜாதாவின் இடத்தில் ஜெ.மோ, மதன் கார்க்கி. பாகுபலியின் வெற்றி அவரை ஆட்கொண்டிருந்தது. இன்று வேள்பாரி 3 பாகங்களாக அவர் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வருகையில் அது பெரிய ஆச்சரியமாக இல்லை.
எழுத்தாளர் கே. சிவக்குமார்
மின் பிம்பங்களில் சுஜாதாவுடன் பனியாற்றியவர். ஒரு கட்டத்தில்
கலைப்புலி தானு தயாரிப்பில் படம் இயக்கும்வரை சென்று பின்பு திசைமாறி ரியல் எஸ்டேட்
தொழிலுக்கு சென்றவர். அவருடைய நாவல்களை ஓடிடி தொடராக்கும் ஒரு வாய்ப்பை
கவிதாலயா தந்தது. அதில் கதையைத் திரைக்கதையாகவும், வசனம் எழுதவும் பின்பு ஓடிடி கேட்க்கும் பிட்ச் செக், கேரக்டர் ஆர்க், வோர்ல்ட், பைபில்
போன்ற நுணுக்கங்கள் பிடிபட
ஆரம்பித்தது. சிவக்குமாரும், மணிபாரதியும்
விவாதங்களின்போது நான் முன்வைக்கும் யோசனைகளைப் பார்த்து என்னை ஒரு நாவல் எழுத முயற்சிக்கச்
சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்போது உருவான கருதான் அட்மின்
vs ஆட்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரத்தில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர்கூட சொல்ல நேரமில்லாத ஒரே இரவில் நடக்கும் கதை பானி என்னை ஈர்த்தது. எல்லோரும் தன் முதல் படக் கதாபாத்திரத்தின் பெயரை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள். இப்படி ஒரு செண்டிமண்டை உடைக்கும் படமா என்று வியந்தேன். அந்த உந்துதலில்தான் எல்லா கதாபாத்திரங்களுக்கும் இந்த நாவலில் சூடோப்பெயர்கள் மட்டும்.(https://en.wikipedia.org/wiki/Maanagaram#Cast)
இன்றுவரை மணிரத்னத்திடமே பேசுவதாக அட்மினான
என்னிடம் பேசும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவ்வளவாக செயல்பாடே இல்லாத என் பக்கத்திலேயே
இத்தனைபேர் அலைமோதினால் சுஹான்சித்தின் நிலை என்னவாக இருக்கும். அவருக்கு மாரியின் அப்பா போன்று ஒரு அப்பா இருந்தால் எப்படி இருக்கும்.
என்னைப் போல சுஹான்சித்திற்கு சித்தாந்த மாற்றம் ஏற்பட்டால் அவருடைய
பதிவுகள், அது ஏற்படுத்து விளைவுகள் எப்படி இருக்கும் இப்படித்தான்
கதை என் கண்முன் காட்சிகளாக விரிந்தது.
பி.எஸ்.மிதரனின் இரும்புத்திரை வெளியாகி பெரிய வெற்றி பெற்றிருந்த சமையம்.
குடும்ப நண்பர் என்பதால் வாழ்த்து சொல்லச் சென்றிருந்தேன். அவர் எங்களுடைய இல்லுமினாட்டி புத்தகத்தைப் படித்திருந்தார். அப்போது இந்த ஒருவரியை அவரிடம் சொன்னேன். மானசீக குருவை
எதிர்த்து நிற்கும் அட்மின். நன்றாக இருக்கிறது கதையாக எழுதுங்கள்
என்றார். அவருடைய அப்பா மித்ரபூமி சரவணன் என் நலனில் அதிகம் அக்கரை
கொண்டவர். அவரிடமும் மற்றொரு குடும்ப நண்பரான பட்டுக்கோட்டை ராஜாவிடமும்தான்
அவ்வப்போது அத்தியாயங்களை அனுப்பி பின்னூட்டங்களைப் பெற்றுக்கொள்வேன். இருவருமே எழுத்து\ஊடகம் சார்ந்து பல வருட அனுபவம் கொண்டர்கள்
என்பதால் ’நீ எழுத்தாளனுக்குக் கதை எழுதுகிறாயா இல்லை வாசகனுக்காக
எழுதுகிறாயா?’ என்று செல்லமாகக் கடிந்துகொண்டதோடு சில பரிந்துரைகளையும்
அளித்தனர்.
அதுவரை என்னுடைய கதைப் பின்புலம் online fraud,
call centre, phishing, crypto, torrents, தமிழ் ராக்கர்ஸ் இதைச் சுற்றித்தான்
இருந்தது. கோவிட் ஊரடங்கு வந்ததும் வேகமெடுத்து எழுத ஆரம்பித்தபோதுதான்
ஜம்தாரா என்ற வலைத்தொடர் வந்தது. இத்தோடு இதை ஏறக்கட்டிவிடவேண்டியதுதான்
என்று நினைத்த போதுதான் கோவிட் இரண்டாம் அலை தொடங்கியது. Love in the time
of Cholera புத்தகம் என் சேகரிப்பில் கண்ணில் பட்டது. இதற்குமுன் ஒரு பெருந்தொற்று பின்புலத்தில் எழுதப்பட்ட முதல் நாவலாக நான் அதை
நினைத்து வாங்கியிருந்தேன். ஏன் நாம் கதைக் களத்தையே மாற்றக்கூடாது
என்று தோன்றியது. ’லவ் இன் த டைம் ஆஃப் கொரோனா’. என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்ட தருணமது.
யாத்திசை படத்தில் ஒரு காட்சிவரும். காடுவழி
செல்லும் நாயகன் பாறை ஒன்றில் திரண்டு இருக்கும் ஆட்டுப் பாலாடைக் கட்டியை வெட்டித்
தின்னுவான். அது பாலாடைக்கட்டிதான் என்று புரிவதற்கு ராஜம் கிருஷ்ணன்
எழுதிய ஒரு நாவலில் வரும் வர்ணனைதான் காரணம். குட்டிகளுக்கு ஊட்டியதுபோக
மிச்சப்பாலை வரையாடுகள் பாறைகளில் அழுத்தி பீச்சிவிட்டுப் போகுமாம். அதுதான் சூட்டில் திரண்டு ஆடை ஆகிறது என்று அவர் எழுதியிருப்பார். அதேபோல்தான் நானும். இவ்வளவுபேருடைய தாக்கம் ஏதோ ஒரு
வடிகாலைத் தேடியது. அதுதான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
நண்பர்களுடைய
உதவி இல்லாமல் எழுதிமுடிப்பது என்று முடிவெடுத்தவுடனேயே நாமே இதைப் பதிப்பிக்கக் கூடாது
என்பதிலும் உறுதியாக இருந்தேன். ஒரு புதுமுக எழுத்தாளராக பதிப்பகத்தை
அனுகி அவர்களுடைய தேர்வுக்குப் பின்னர் இதை வெளியிடலாமா வேண்டாமா என்ற முடிவை அவர்கள்தான்
எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது முதலில் என் மனதுக்குத்
தோன்றியது யாவரும் பதிப்பகம்தான். ஷான் கருப்புசாமியின் வெட்டாட்டம்தான்
எனக்கு ஒரு இந்தக் கதையை எப்படி எழுத வேண்டும் என்ற வடிவத்தைக் கொடுத்தது.
சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் ‘ப்ரிஜர்டன்’ என்ற வலைத்தொடரை மனைவி தொடர்ந்து பார்த்ததால் நானும் பாதியில் சேர்ந்துகொண்டேன். பிரபத்துவ காலத்தில் சுயம்வரங்கள் எப்படி நடந்தன, அதில் ராணிகளின் அரசியல் நகர்வுகள் எப்படி இருந்தது, பாரம்பரியமான குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள என்னென்ன நாடகங்களை எல்லாம்
நடத்தினர், அந்த மாளிகைகள், விருந்துகள், ஆடை அலங்கார ஆடம்பரங்கள் இவற்றில் உள்ள ஆர்வத்தால் என் மனைவி பார்த்தார். அதில் வரும் லேடி விசில்டவுனுக்காக நான் பார்த்தேன். கூச்ச சுபாவமுடைய அவள் அச்சுகாலத்தின் கட்டியங்காரி...ராணியைத் தொடர்ந்து விமர்சித்த அவளை வலைவீசித் தேடினாலும் அவளது எழுத்தாளுமையை ராணி ரசித்தார். உருவகேலிக்கு உள்ளாகும் ஒரு பெண் ஒட்டுமொத்த சுயம்வரத்தின் போக்கையே வடிவமைக்கிறாள் என்ற டிஸ்டோப்பியன் கதைக்களத்தில், கருப்பின ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்த ஒரு காலத்தின் சுவடே இல்லாமல் வெள்ளையருக்கு நிகராக கருப்பின பிரபுக்களும் சுயம்வரத்தில் கலந்துகொண்டமாதிரியும், திருமண உறவுகளில் ஈடுபடும்விதம் காட்சிகள் வருவதும் ஒரு உடோப்பியன் சிந்தனை.
கொரோனா போன்ற பெருந்தொற்றுக்குப் பின்னால்
இருக்கும் சர்வதேச அரசியல், நம்முடைய பாரம்பரிய மருத்துவம் பற்றிய புரிதல்
இதுதான் நான் புதிதாக வகுத்துக்கொண்ட கதைக்களம். சில தகவல்களை
உறுதிசெய்துகொள்வதற்காக அரீட் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தும் செந்தில்
குமாரிடமும், மருத்துவர் விக்ரம் குமாரிடமும் அடிக்கடி பேசுவேன்.
அவர்களுக்கே பல சந்தேகங்கள் இருந்தாலும் பொதுவெளியில் அவர்கள் அதைப்
பற்றியெல்லாம் பேசுவதைத் தவிர்க்கச் சொன்னதால் கொரோனா பற்றி தீர்ப்பு எதுவும் எழுதாமல்
அடுத்த பாகத்திற்கான முன்னோட்டத்தோடு இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறேன்.
ஒரு எழுத்தாளனாக வாசகர்கள் என்னை ஏற்றுக்கொண்டால்
நிச்சயம் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன்!
Comments