அப்படி என்ன தாங்க முடியாத சோகமப்பா உனக்கு
வாழ்க்கையில . இப்பிடி தாடி வளர்த்துக்கிட்டு திரியிரே?
திரும்புகிற பக்கம் எல்லாம் இதே கேள்விதான். ஓயாமல் இது என் காதில் எதிரொலித்துக்
கொண்டேயிருக்கவே தாடி தரும்
ஒருவிதமான ஏகாந்த சுகத்தை அனுபவிக்கும் கொடுப்பினை நமக்கு இல்லை என்ற மன அயர்ச்சியினாலோ, பன்முனைத்தாக்குதலை எதிர்கொள்ள முடியாதாலோ ஒருவேளை அத்தகைய மன மாற்றம் எனக்குள் ஏற்பட்டதோ என்னவோ எனக்குத் தெரியாது, அனிச்சையாக என் வண்டி மடை மாறி வீட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள சிறு முடி திருத்தகம் ஒன்றிற்கு முன்னால் போய் நின்றது. உள்ளே
ஏகக் கூட்டம். என்னைப் போலவே இப்ப அவ்வளவா கூட்டம் இருக்காது என்று உத்தேசித்து அவர்கள் வந்திருக்கவேண்டும்.
"சார்! கொஞ்சம் வெயிட் பண்ண முடியுமா? மூணே பேர்தான். சீக்கிரம் முடிஞ்சிடும்" என்றார் நாவிதர் புன் சிரிப்புடன். அது
ஒரு மாலைப்பொழுது, வெய்யில் சாயும் நேரம். குளிரூட்டப்பட்ட அறை. ரம்யமான இளையராஜாவின் இசை. என்
முறை வர நேரம் அதிகம் பிடிக்கக்கூடும் என்ற நிதர்சனம் உறைத்தாலும் ஏனோ ஒரு மோனப் புன்னகை இதயத்தினுள்ளிருந்து வெளிக்கிளம்ப, சற்றும் தாமதிக்காமல்.சரி என்றேன்
சவுகரியமாக உட்கார்ந்துகொண்டபின் சுற்றும் முற்றும் பார்த்தேன். கடை சமீபத்தில்தான் நவீனமயமாக்கப்பட்டிருப்பது தெரிந்தது. ஒரு மூலையில் பழுப்பேறிய கண்ணாடி ஒன்று பழைய பொருட்களின்
எச்சமாக சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அதற்குச் சற்று மேலே உள்ள ஒரு படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தன் தகப்பனிடம் தொழில் பயின்ற மகன் அவருடைய ஞாபகார்த்தமாக அந்தக் கண்ணாடியை அங்கேயே வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. அதனைச் சற்று எட்டிப் பார்த்தேன். பாதரசம் தேய்ந்திருந்ததாலோ என்னவோ என் அனுமானத்திற்கும் அப்பால் என் முகம் விகாரமாகத் தோற்றம் அளித்தது. சரி வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யலாம் என்று தோன்றியதும் பக்கத்து இருக்கைகளிலிருந்த செய்தித்தாள்களையும், இதழ்களையும் பழையதாய் இருந்தாலும் பரவா இல்லை என்று கையில் எடுத்துப் புரட்டினேன். எதுவும் சோபிக்கவில்லை.
விட்டேத்தியாக கண்ணாடிக்கு அப்பால் உள்ளவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் உள்ளிருந்து வெளியே பார்க்க முடிந்ததுபோல், வெளியிலிருப்பவருக்கு உள்ளே இருப்பவை தெரியாத மாதிரியான கண்ணாடிபோலும் அது. எவனோ ஒருவன் எதுத்தாப்பில நிறுத்தி இருந்த என் வண்டியைத் தூக்க முயன்றுகொண்டிருந்தான். திடுக்கிட்டு வெளியே சென்றேன். சாவு ஊர்வலம் ஒன்று சற்றுதூரத்தில் வந்துகொண்டிருந்தது.
ஆடிப் பாடி, வெடிவெடித்து ஆர்ப்பாட்டமாக வந்துகொண்டிருந்த ஊர்வலத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அந்த இளைஞன் அதன் பாதையில் இருந்த வண்டிகளை எல்லாம் நகட்டிக்கொண்டிருந்தான்.
கூட்டம் நெருங்க நெருங்கக் கூச்சல் கூடியது. இளையராஜாவின் அமுதகானத்தில் திளைத்திருந்த அனைவரையும் மெல்லத்திறந்த கதவு வழியே கசிந்து வந்த தாரை தப்பட்டைச் சத்தம் தட்டி எழுப்பியது. எல்லோரும் ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தோம். அது கடந்து சென்றதும் ஒருவர் சொன்னார்.
" நல்லா வாழ்ந்த மனுஷன் போல. பெரிய சாவு. இருந்த வரைக்கும் எப்படிப் பாத்துக்கிட்டானுகன்னு தெரியல இப்படி வெறித்தனமா ஆடிப் பாடறது மூலமா அவர் இருக்கும்போது சொல்லாத எதை, எங்கே . இப்போ பதிவு பண்ண விரும்புறாங்க இவங்க. சுத்தக் காட்டானுங்கப்பா! என்று சலித்துக் கொண்டார்.
இப்படிக் கொஞ்சம் கிண்டல், நிறைய
கேலி, அமர்க்களமான சிரிப்பு, அட்டகாசமான
விவாதம் என்று நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. சட்டென்று எல்லோரும் சகஜ நிலைக்குத் திரும்ப கத்தரி சத்தத்தின் ஊடாக மெல்ல மெல்ல இளையராஜா மீண்டும் என்னை ஆட்கொண்டார்.
இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் போலிருக்கிறதே என்ற எண்ணம் வந்த போதுதான் என் பையில் சார்வாகன் சிறுகதைத் தொகுப்பு இருப்பது நினைவுக்கு வந்தது. நான் அதைப் படிப்பதற்காக வாங்கியிருக்கவில்லை , நண்பர் ஒருவர் அந்தப் புத்தகத்தை வாங்கித் தபால் மூலம் தனக்கு அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தார்.
என்ன செய்யலாம் என்று யோசித்த அதே பொழுதில் எதேச்சையாக என் மூளைக்கும், மனதிற்குமான உரையாடலை ஒட்டுக்கேட்கவேண்டிவந்தது
ம:
‘எடுத்து ஒரு கதையையாவது படித்துப் பார்க்கலாமா?’
மூ:
'உனக்குத்தான் நவீன இலக்கிய வர்டிகோ இருக்கிறதே. அப்படியிருக்கையில்
அதை எப்படிப் படிப்பாய்? அதுவும் ஒரு பொது இடத்தில்? பந்தா காட்டுவது போல் அது ஆகிவிடாதா. வேண்டாம். தற்சமயத்திற்கு இளையராஜாவைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்'
ம:
‘அது சரி. வேடிக்கையைப் பாத்தியா? பாமரனுக்கும், படிச்சவனுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் அவன் ஒரு விஷயத்த எப்பிடி வெளிப்படுத்துறாங்கறதுலதான் இருக்கு. அவன் அழுது, பொரண்டு நடு ரோட்டுல ஒப்பாரி வெக்கிறான், இவன் கவிதை கட்டுரைன்னு பொதுவெளியில எழுதித் தள்ளுறான். ஆனா யார் இந்த சார்வாகன்? ஏன் திடீர்னு எல்லாரும் அவரைக் கொண்டாடுறாங்க? எனக்கு தெரிஞ்சே ஆகனும்? அதற்கு நான் அந்தப் புத்தகத்தைப் படிச்சே ஆகனும் . ‘
மூ: ரெண்டு
பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பாமரன் தனக்குள் ஏற்படும் அதீத அதிர்வுகளால் உந்தப்பட்டு கூச்சலிட்டு, பட்டாசு வெடித்து தன் வேதனையை வெளிப்படுத்துவான். படிச்சவன் நுட்பமான வார்த்தைகளால் தன் மெல்லிய உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்வான். முதலாவது சொரணை சார்ந்தது. இது ரசனை சார்ந்தது.
சார்வாகன் யாரென்றா கேட்டாய்? இயற்பெயர் ஹரி ஸ்ரீனிவாசன். உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் குழுவில் கிட்டத்தட்ட
20 ஆண்டுகள் அங்கம் வகித்தவர்,
2004 ஆம் ஆண்டு `இண்டர்நேஷனல் காந்தி அவார்டு’ பெற்றவர். இவர் தனது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்த அறுவை சிகிச்சை முறைகள் இந்தியா மட்டும் இல்லாமல் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. தொழுநோய்...
ம: ம்ம்...நிப்பாட்டும். இதையெல்லாம் தளம் மார்ச் இதழில் படித்து நானே தெரிந்துகொள்வேன். அவருக்கு பத்ம விருது கொடுத்தது எழுத்திற்காக. அவர் கதைகளில் அப்படி என்ன விசேஷம். குடும்பமே மருத்துவர்கள் குடும்பங்கறதால,மருத்துவ நெடி அதில தூக்கலாக இருக்குமா? சுஜாதாபோல் அறிவியலைக் கதைவடிவில் சுவாரஸ்யமான நடையில் எழுதுபவரா இவர்? அதைப்பற்றி மட்டும் சொல்லும்!
மூ: ஹாஹா...இவ்வளவுதானா? சொல்கிறேன் கேள். காதல் வைரஸ் படம் பார்த்திருக்கிறாயில்லையா?
ம: உமக்குக் கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லும் பழக்கமே இல்லையா?
மூ: என்ன செய்வது. விலாசம் தெரியாமல் தேடுபவனிடம் அவனுக்கு எந்த இடம் தெரியுமோ அந்த இடத்திலிருந்துதானே அவனுக்கு வழி சொல்ல முடியும்!
ம:உன்கிட்ட தர்க்கம் பண்ணி நான் ஜெயிக்கவா! மேல சொல்லு!
மூ:அப்படி வா..வழிக்கு..ஆமாம் எங்க விட்டேன்....ஆ...அதில் கதா நாயகனும், நாயகியும் ஒரே நாவலாசிரியரைப் பிடிக்கும் என்று சொல்வார்களே? உனக்குக்கூட அந்தப் புத்தகம் தேடும் காட்சி ரொம்பப் பிடிக்குமே?
ம: எப்பா சாமி! எனக்குப் படம் பிடிக்கும்தான்....ஆனா சோமர்செட் மாமுக்கும், சார்வாகனுக்கும் எழுத்தாளர்ங்கறதத் தவிர என்ன ஒத்துமை?
மூ: இரண்டுபேரும் தொழில்முறை மருத்துவர்கள், ஆனால் எழுத்தால் அதிகம் பிரபலம் அடைந்தவர்கள் என்று சொல்லி முடிப்பதற்குள் என்னைத் திட்டிவிட்டாயே? உன்னால்தான் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று என்னையும் சேர்த்துத் திட்டுகிறார்கள். இனி என்னிடமிருந்து பதில் எப்படி வருகிறது பார்?
ம: ஓ.பீலிங்கா? உனக்கு வராத ஒரு விஷயத்தை ஏன் ட்ரை பண்ற? சோமர்செட் மாம் கதைங்கள நான் முழுசா வாசிச்சதில்ல. வேற உதாரணம் சொல்லு. இலட்சுமி அம்மா கூட அப்பிடித்தானே? அவங்கள மாதிரி அவங்க பார்த்த குப்பத்து ஆளுங்க, சேரி, ஆஸ்பத்திரி இதையெல்லாம் வெச்சு எழுதுவாரா?
மூ: இல்லை. இவர் வேற மாதிரி!
ம: சர்தான்! இனி தேஞ்ச ரெக்கார்டு மாதிரி நீ இத்தையேதான் சொல்லுவே! ரைட் விடு. நானே பாத்துக்கறேன்!
நீண்ட உரையாடல் ஒன்று நடந்து முடிந்ததுபோன்ற பிரமை ஏற்பட்டாலும் உண்மையில் சில நிமிடங்கள்தான் கடந்திருந்தது. மனம் கொடுத்த உத்வேகத்தில் கைகள் புத்தகத்தை வேகமாக எடுத்தன.. மூளை உனக்கும் தீவிர இலக்கியத்திற்கும் ஏழாம் பொருத்தம் ஏன் இந்த விபரீத விளையாட்டு என்று முட்டுக்கட்டை போட்டுப் பார்த்துத் தோற்றது. படிக்க ஆரம்பித்தேன். கண்களை 'வாவா நகரம்' என்ற சிறுகதைதான் முதலில் கவர்ந்தது. அது எனக்குக் கடிவாளம் போட்டுவிட்டது. ஹய் ஹய்...என்று சாட்டையடிபோல் அந்தக் கதையிலிருந்த வார்த்தைகள் என் கண்ணை
248ஆம் பக்கத்தை நோக்கிச் செலுத்த முதலில் முரண்டு பிடித்த மூளையும், மனமும் இரட்டை மாட்டு வண்டியில் பூட்டிய ஏறுகளைப்போல் சூடு சொரணையையெல்லாம் விட்டுவிட்டு ரசனை என்னும் ஒரு புள்ளியில் ஒன்றிப்போனது. ஒரே பாய்ச்சலில் அடுத்தடுத்து விசுவரூபம், ரப்பர் மாமா, கனவுக்கதை என்று தாவிக்கொண்டேபோய்க் கடைசியாக அவர் எழுதிய '
எனக்கு முன்னாள் ...' சிறுகதையில் போய் நின்றது. விருவிருப்பான அந்தக் கட்டத்தில் நாவிதர் அழைத்தார்
“சார்...ரெடி..”
எனக்கடுத்து 2
பேர் காத்துக்கொண்டிருந்தார்கள். பதில் ஏதும் சொல்லாமல் இருக்கையில் சென்று அமர்ந்தேன்.
”ஃபுல் ஷெவா, ப்ரென்சு பியர்டா இல்லை. மெசின் பொடவா சார்?” என்றார் அவர்.
யோசனையோடு தாவங்கட்டையைத் தடவியபடியே கண்ணாடியை வெறித்துப் பார்த்தேன். பிரகாசமான வெளிச்சம். முன்னேயும் பின்னேயும் கண்ணாடியிருந்ததால் என் பிம்பம் கண்ணாடிக்குள்.. நான், எனக்குள் கண்ணாடி... என்ற அமைப்பில் காட்டும் மாயக்கண்ணாடிபோல் அது இருந்தது. பொதுவாகவே நான் எப்போதுமே எழுத்தாளர்களை கண்ணாடியுடன் ஒப்பிடுவது உண்டு. சிலர் அந்தப் பழைய பாதரசம் தேய்ந்த பழுப்புக் கண்ணாடிபோல் நம் உள் மனதின் விகாரங்களை அப்பட்டமாகப் பிரதிபலிப்பார்கள். சிலர் அந்த ஒருபக்கக் கண்ணாடிபோன்றவர்கள். அவர்களது எழுத்தின் சாரத்தை உள்வாங்க முடிந்தாலும் அவர் எப்படிப்பட்ட மனிதராக வாழ்ந்தார் என்பதை
அவ்வளவு எளிதாக நம்மால் தெரிந்து கொண்டுவிட முடியாது, இன்னும் சிலர் மூக்குக் கண்ணாடிபோல் அத்தியாவசியமானவர்களாக இருப்பார்கள், வேறு சிலரோ பூதக்கண்ணாடிபோல் எல்லாவற்றையும் மிகையாகவே காட்டுவார்கள். ஆனால் சார்வாகன் ஒரு மாயக்கண்ணாடி. சொற்கொல்லன், புகைவிடு சித்தர், ஹரி ஸ்ரீனிவாசன் என்ற தன் பல்வேறு எழுத்துப் பரிமாணங்களால் தன்னைப் படிக்கும் வாசகர்களுக்குள் தனக்குள் உள்ள அறிவியல் அறிவை, ஹாஸ்யத்தை, ஆன்மிகத்தை ஒன்றினுள் ஒன்றான பிம்பமாகக் கட்டி எழுப்பும் வல்லமை கொண்டவர். 4 வருடப் பொறியியல் படிப்பின்போது பிடிபடாத
moores law, பட்டுப்பூச்சி இட்ட கடைசி முத்தம் போல் தன் ‘எனக்கு முன்னால்..’ சிறுகதையில் அவரது எள்ளல் நடையில் தன் மூதாதையரைத் தேடும் பிரயாசையில் எப்படி உலகமே தன் குடும்பம் என்று அவர் சொல்லும் சூட்சமமான கணக்கு சொல்லாமல் சொல்லித் தந்தது, அசிமோவ் படித்துத் தான்
sci-fi புரிய வேண்டும் என்பது இல்லை...வாவா நகரம் போதும் என்று தோன்றியது. தீபக் சோப்ரா படித்தும் விளங்காத மரணத்திற்குப் பின்னால் உள்ள உலகம் எப்படிப்பட்டது என்ற புதிரை பி்ரியா விடை உடைத்தெறிந்தது.
இந்த மாயக்கண்ணாடியை ஆன்மிகவாதிகள் ‘Gabriel’s Horn’ என்று அழைப்பார்கள். தேவதூதரான கேப்ரியேல் தீர்ப்பு நாளை அறிவிக்கப் பயன்படுத்தும் நீண்ட நாதஸ்வர ஒலியைப்போல் அது தோற்றம் அளிப்பதால்தான் அதற்கு அந்தப்பெயர். ஆனால் சார்வாகன் இறை நம்பிக்கைக்கூட கைவிட்டவர்களை அறிவியல்பூர்வமாக அணுகி ஒரு மனிதன் என்ற வகையில் அவர்களை ஒரு படியளவிற்கேனும் மேம்படுத்தியவர். அதனால் அவர் இறந்துவிட்டார், அமரராகிவிட்டார், நாம் எட்ட முடியாத இடத்திற்குப் போய்ச் சேர்ந்துவிட்டார் என்றெல்லாம் புலம்பத் தேவையில்லை. அறிவியலாளர்களின் கூற்றுப்படி இந்த மாயத்தோற்றத்திற்கு ‘இன்பைனைட் மிர்ரர்’ என்று பெயர். உங்களுக்குள் சார்வாகனை, சார்வகனுக்குள் உங்களை என ஒன்றிற்குள்
ஒன்றானதொரு பிம்பத்தை
அவரதசிறுகதைகளையும்,குறுநாவல்களையும்,கவிதைகளையும், கட்டுரைகளையும் வாசிக்கும்போது நீங்கள் பார்க்கலாம்.
நாவிதர் மீண்டும் எதுவும் கேட்க வாயெடுக்கும் முன் நான் கூறினேன்
“ இப்போதைக்கு ஃபுல் ஷெவோ, ப்ரென்சு பியர்டோ வேண்டாம். மெஷின் இல்லாம சும்மா கத்திரியாலேயே லெவல் பண்ணி விடுங்க. இன்னும் கொஞ்ச நாள் தாடி வளக்கலாம்னு இருக்கேன்.”
Comments