ஷெர்லாக் ஹோம்ஸ்! இந்தக் கற்பனை துப்பறிவாளரின் கதாப்பாத்திரம் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி 70 வெவ்வேறு நடிகர்களால் அந்தந்த காலகட்டத்திற்கு மெருகூட்டப்பட்டு அதேப் பொலிவுடன் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டேயிருக்கும் கின்னஸ் சாதனை! சமீபத்தில் பிபிஸி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் இந்தப் புதிய பதிப்பில் வரும் ஷெர்லாக் செல்ஃபோன் உபயோகிக்கிறார். நவீன சாதனங்களைப் பயன்படுத்தித் துப்பறிகிறார். அதனால் அது புது ரசிகர்களை உண்டாக்கியிருக்கிறது. ஷெர்லாக் ஹோம்சை உருவாக்கியவர் ஆர்தர் கானன் டாயல்!
பெண் எழுத்தாளர்களில் அகாதா கிரிஸ்டி எழுதிய "கர்டைன்”நாவலின் கற்பனைக் கதாப்பாத்திரமான பொய்ரோட், கதைப்படி இறந்தபொழுது வாசகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி எழுதிய கடிதங்கள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டன. தன் 50வது வயதிற்கு மேல் த்ரில்லர் கதைகள் எழுதத் தொடங்கிய சிட்னி ஷெல்டன் இன்றுவரை தன் புத்தகங்கள் மூலம் இறவாப் புகழுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இதேப் போன்று, தமிழ்ச் சூழலில்...தகவல் களஞ்சியங்களும், உலக நாடுகளுக்கு விசாவும் அரிதாகக் கிடைக்கும் காலக்கட்டத்தில் வெளிவந்த தமிழ்வாணனின் "சங்கர்லால் துப்பறிகிறார்” கதைகளை மக்கள் வெகுவாகக் கொண்டாடினார்கள். இன்றும் தேடிப் படிக்கிறார்கள்.
தமிழ் எழுத்துலகின் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருந்த சுஜாதா இந்த வகைக் கதை சொல்லும் பாணியையும் விட்டு வைக்கவில்லை. அவரின் கணேஷ் வஸந்த் கதாப்பாத்திரங்கள் கொடி கட்டிப்பறந்தன. ரஜினிகாந்த், ஜெயசங்கர் போன்ற முன்னணி நடிகர்கள் கணேஷ் கதாபாத்திரத்தில் நடித்தார்கள். சின்னத் திரையிலும் கணேஷ் வஸந்த் எட்டிப் பார்த்தார்கள்.
கல்கண்டில் எழுதத் தொடங்கிய ராஜேஷ் குமார், தமிழ்வாணனிடமிருந்து பெற்ற அந்த எழுதுகோலுக்கு மையூற்றத் தொடங்கி 1700 நாவல்களைத் தாண்டி இன்னும் எழுதிக்கொண்டு இருக்கிறார். அவருடைய விவேக், ரூபலா கதைகள் இன்றும் பிரபலம். அங்கு அசிமோவ் சைன்ஸ் ஃபிக்ன் எனும் புதிய பாணியை உருவாக்கினால்.. இங்கு இந்திரா சௌந்தர்ராஜன்அமானுஷ்ய உலகத்தைக் கச்சித்தமாகக் கட்டமைத்தார். ஜாவர் சீதாராமன்,தேவன், கலாதர், ரா.கி.ரங்கராஜன், புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், சுபா, ஆர்னிகா நாசர், ஆகியோரும் சிறப்பான த்ரில்லர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
இவர்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்த ஒரு விஷயம் இவர்களுக்கு இருந்த ஒரு அபரிமிதமான அறிவுத்தேடல். அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, அரசியல் இவை எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக்கொண்டே வந்த இவர்கள் தாங்கள் சேகரித்த தகவல் குவிப்பை தங்கள் கதைகள் மூலமாக வாசகர்களுக்குத் தங்கள் எளிய மொழி நடையில் கடத்தினார்கள். காரணமறிந்து சுவாரசியமாக பாத்திரம் சமைத்தார்கள்.
இப்படிப்பட்ட நீண்ட நெடிய பல்ப் ஃபிக்ன் பாரம்பரியத்தில் 77 துவங்கி பட்டுக்கோட்டை பிரபாகர் தமிழ் எழுத்து உலகில் இயங்கி வருகிறார்.இவரது பரத்--&சுசீலா (மூன்லைட் ஏஜன்சீஸ்) கதைகள் வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றவை. ஷெர்லாக்கின் 21, பேக்கர் ஸ்ட்ரீட் போலவே இவரின் வீட்டு விலாசமான தலையாரித் தெருவும் வாசர்களிடையே பிரசித்தம் பெற்றது. பரத்தின் குறும்புக்காக பெண்களும் சுசிலாவின் துள்ளலுக்காக ஆண்களும் மானசீகமாக அந்தப் பாத்திரங்களைக் காதலிக்கவேச் செய்தார்கள். சுசிலா அணியும் டி ஷர்ட்டுக்கு வாசகர்களே குறும்பு வாசகங்கள் எழுதி அனுப்பினார்கள். பரத், சுசிலா என்று சில வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயரே வைத்தார்கள். மன்றங்கள்கூட இயங்கின.
இருப்பினும் மேற்கூரிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் இல்லாத ஒரு சவால்/சுமையை மீறி அவர் தன் 40 ஆண்டு எழுத்துப்பணியில் நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர் கதைகள், தொலைக்காட்சித்தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
அப்படியிருக்க அது என்ன சவால்? அப்படி என்ன சுமை? என்று கேட்கிறீர்களா? உடனக்குடன் திடுக்கிடும் தகவல்களால் நம்மை திசை திருப்பிக்கொண்டேயிருக்கும் நவீன ஊடக யுகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பல கொலை, கடத்தல் செய்திகளினூடே குற்றவியல் பின்புலம் பல நேரம் நமக்கு முழுமையாகத் தெரிவதில்லை. போதிய ஆவணங்களைச் சேகரிக்கும் அவகாசம் இல்லாத காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் புலனாய்வு நோக்கிலோ அல்லது பாதிக்கப்பட்ட நபர், குற்றவாளி, சாட்சி இவர்களின் பார்வையிலோதான் பொதுவாகக் க்ரைம் த்ரில்லர்கள் எழுதுபவர்களின் கதைகள் விரியும்.
ஆனால் சுஜாதாவைப் போலவே தீவிர வாசிப்பும், தொழில் நுட்பத்தின் புரிதலும் கைக்கொண்டவரான பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லா வயதினரும் ரசிக்கும்படியாக எழுதி வருகிறார். எல்லா வயதினரோடும் இணைந்து இயங்கி வருகிறார். பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி முதல் இன்றைய யூ டியூப் சேனல்கள் வரை அனைத்து ஊடகங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு வெல்வது கடுமையான சவால்தானே?
இன்று காட்சி ஊடகத்தின் வீச்சால் எழுத்து, வாசிப்பு, அனுபவ அறிவு, பத்திரிகை இப்படி பல்வேறு படிநிலைகளில் கைபடாமலேயே நேரடியாகதம் 20 வயதிலேயே தன்னுடைய முதல் குறும்படத்தைத் திரையில் கொண்டுவந்துவிடும் ஆற்றல்மிக்க இளம் படைப்பாளிகளுடனும் தன்னால் ஈடுகொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக இவர் வரையறுத்துக்கொண்ட, தினம் தினம் சிந்தனையிலும், கருத்தாக்கத்திலும், தகவலறிவிலும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வளரும் வாழ்வியல் முறைக்குக் கிடைத்த வெற்றி.
Buy Online : goo.gl/cPtGMw
இதற்கான சமீபத்திய சான்று.. ஃப்ளைட் ஹைஜாக்கை மையமாகக் கொண்டு அவர் குமுதம் வார இதழில் எழுதிய “ஆகாயத்தில் பூகம்பம்'' தொடர். ஒரு பைலட், ஒரு பிரிகேடியர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளம் இயக்குநர்கள் என்று பலவகையான கதாப்பாத்திரங்கள். இவர்களது வாழ்க்கைக் கனவுகள், இலட்சியம், அடிப்படை சித்தாந்தம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு தொடங்கி சர்வதேச அரசியல்வரை உள்ள நடப்பு நிகழ்வுகள் எல்லாம் இடம் பெரும் ஒரு வலைப்பின்னலாகக் கதையை அமைத்து பிரமிக்க வைத்திருக்கிறார். தொடர்கதை என்னும் வடிவம் மங்கிப் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் மீண்டும் தொடர்கதைகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வெற்றித்தொடரான இந்தக் கதைக்கு வாசகர்களின் ஆதரவு எக்கச்சக்கம்!
44 அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலை ஓவியர் ஷ்யாமின் படங்களுடன் அதிகபட்சம் 100 காட்சிகள் கொண்ட ஒரு கையடக்கத் திரைப்படமாகவேப் பாவிக்கத் தோன்றுகிறது. கூடிய விரைவில் திரைப்படமாகவும் இந்தக் கதை வெளிவர இருக்கிறது. பைலட் அவினாஷாக, பிரிகேடியர் அருண் அரோராவாக, இயக்கத்தின் ஆதர்சத் தொண்டனான ஆதர்ஷாக யார் யாரெல்லாம் திரையில் வலம் வரப்போகிறார்கள் என்பதைப் பார்க்க உங்களைப் போலவே நாங்களும் ஆவலாக இருக்கிறோம்.
இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் அழகான படம் வரைந்தும், தன் ஓவியங்களை ஆங்காங்கே பயன்படுத்த அனுமதி தந்தும் ஒத்துழைத்திருக்கும் ஓவியர் ஷ்யாம் அவர்களுக்கும், அட்டையை மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கும் "ஹெச்-க்ரியேட்டிவ் ஹெட்ஸ்”நிறுவனத்தின் ஸ்வர்ண ப்ரியாவுக்கும், பக்கங்களை ஈர்க்கும் வண்ணம் வடிவமைத்த மகேஷுக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றி.
"தயாளன் துப்பறிகிறார்” என்கிற வரிசையில்வரும் முதல் புத்தகம் இது. (ஆனால்..இந்தக் கதையில் தயாளனுக்கு கௌரவ வேடம்தான்!) பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய.. தயாளன் துப்பறிந்த.. பல புகழ்மிக்க கதைகள் அழகிய புத்தகங்களாக தொடர்ந்து வெளிவரும் என்கிற நற்செய்தியுடன் நாவல் படிக்கக்காத்திருக்கும் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
இப்படிக்கு,
கார்த்திகேயன் புகழேந்தி
வானவில் புத்தகாலயம்
05.04.2017
Comments