``மேடம் கார்ப்பரேஷன் ஆப்பீஸ்லேர்ந்து வர்றோம்! கெனடாலேர்ந்து வந்த ஃபேமிலி சிதம்பரம்- சிவகாமி இந்த வீடுதானே.’’
``உங்க வீட்ல யாருக்காச்சும் சளி, இருமல் இல்ல காய்ச்சல் இருக்கா!’’
``எல்லாம் டெஸ்டும் எடுத்துட்டாங்களே. மறுபடியும் வரச்சொல்லட்டுமா?”
“இது ரொடீன் என்குயரிதான். இன்னும் ஒரு வாரத்துக்கு இப்படி யாராச்சும் வருவாங்க. அதுக்கப்புறம் வெளியில ஒட்டிருக்க குவாரண்டைன் ஸ்டிக்கர எடுத்துடுவாங்க. அதுவரைக்கும் கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுங்க மேடம். ப்ளீஸ்!”
”சரி வரச்சொல்றேன்!”
”உங்க பேர் மேடம்?”
“காவேரி.சிதம்பரத்தோட அம்மா. நானும் என் வீட்டுக்காரரும்தான் இங்க குடியிருக்கோம். அவருக்கு ஒடம்புக்கு சரியில்லன்னுதான் புள்ள…பேரப்பசங்கள்லாம் பார்க்க வந்தாங்க….இப்ப அவர் மட்டும் ஹாஸ்பத்ரில தனியா இருக்கார்.”
“ஒன்னும் பயம் வேண்டாம் மேடம். அங்க இருக்கவங்க நல்லாப் பாத்துப்பாங்க!”
“அது சரி!. சிதம்பரம்-சிவகாமி, பிள்ளைங்களா எல்லாரும் செத்த வாங்க இங்க”
“யாரும்மா! கார்ப்பரேஷனா? மேடம் உங்க ஆஃபிஸர் சொன்ன மாதிரி நாங்களே ஐசொலேஷன்லதான் இருக்கோம். நானும் என் வைஃபும் அந்த ரூம்ல…பசங்க ரெண்டு பேரும் இந்த ரூம்ல….அம்மா ஹால்ல. யாருக்கும் டெம்பரேச்சர் இல்ல. நீங்க செக் பண்ணிக்கலாம்… நாங்க வந்தது மார்ச் முதல் வாரத்துல …இப்ப ஏப்ரல் ஆச்சு…இன்ஃபெக்ஷன் இருந்தாலும் போயிருக்குமில்லையா?”
“கரெக்ட்தான் சார்….எல்லாம் ஒரு சேஃப்டிக்குதான்….உங்களுக்குத் தேவையான ப்ரொவிஷனெல்லாம் கரெக்டா வருதா?யாரும் வீட்டைவிட்டு வெளிய போகலையே?”
” உங்க நெலம புரியுது மேடம். பசங்க ஸ்விக்கி, அமேசான்ல நோ காண்டேக்ட் டெலிவரி போட்டிடுறாங்க. ஒன்னும் பிரச்னையில்ல…இன்னும் ஒரு வாரம்தானே. நான் பார்த்துக்கறேன்”
“ஓ.கே மேடம்….எல்லார் டெஸ்டும் நார்மல்தான். தேன்க்ஸ்”
எல்லோரும் அவரவர் அறைக்குச் சென்ற பின்…சிறிது நேரம் கழித்து ஒரு அறையிலிருந்து பாடல் சத்தம் மெலிதாக ஒலிக்க…..
(பாடுவீரோ... தேவரே...
பரணி.... கலம்பகம்... உலா... ஏதேனும்?
ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் யேனும்
ஹா... ஹா... ஹா... அறிவீரோ)
நெல்லாடிய நிலம் எங்கே
சொல்லாடிய அவையெங்கே..
வில்லாடிய களம் எங்கே..
கல்லாடிய சிலை எங்கே..
தாய் தின்ற மண்ணே..
தாய் தின்ற மண்ணே..
``ஏன்டா அண்ணா இவங்க ரெண்டு பேரோட அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லையா? இன்னும் அகத்தியன் பட ஹீரோ, ஹீரோயினாவே பாட்டுக்குப் பாட்டுப் போட்டுக்கிட்டு பேச்சுவார்த்தை நடத்துறாங்க. ஒரு மூத்த மகனா நீ இதெல்லாம் தட்டிக் கேக்குறதில்லையா?”
”‘Everyone has their choice of poison’. சில பேருக்குக் குடி, சில பேருக்குப் பொடி, தாத்தா பாட்டிக்குக் காப்பி, எனக்கு என் செஸ், உனக்கு உன் லெகோ. அந்த மாதிரி அவங்க ரெண்டுபேருக்கும் பாட்டுதான் எல்லாத்துக்கும் மருந்து. இந்த மோன அந்தாக்சரிய நான் விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து பாக்குறேன். ஒரு பெரிய சிக்கலப் பத்தி அசைபோட… இல்ல, ஒரு சண்டைக்கு அப்புறம் சுமூகமாக இப்படி ஆளுக்கு ஒரு பாட்ட மாத்தி மாத்தி ஒலிக்கவிட்டுட்டு அமைதியா இருப்பாங்க. ஒவ்வொரு பாட்டைச் சுத்தியும் அவங்க ரெண்டுபேருக்குள்ள பேசப்படாத பல தகவல், நினைவுகள் பரிமாற்றம் நடக்குது. மனசு லேசானப்புறம் பாட்ட நிறுத்திட்டுப் பேச ஆரம்பிச்சிடுவாங்க.”
”இப்ப இவங்களுக்குள்ள என்ன பிரச்னையாம். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்போறாங்களா?ஆளுக்கு ஒரு நாட்டுல குடியுரிமை இருக்கு. ஆனா இன்னிக்குத் தேதில எந்த ஊர்ல இருந்தாலும் நம்ம நெலம இப்படிதான் இருந்திருக்கும். அங்க இன்ஸூரன்ஸுன்னு முன்னாடியே காசு கட்டிருப்போம். இங்க ஏதாச்சுன்னா நாம செலவு பாத்துக்கனும். எது வசதின்னு படுதோ அங்க இனிமேலாவது ஒன்னா இருக்கலாம். பார்போம் என்ன முடிவுக்கு வர்றாங்கன்னு”
’’ஹம்ம்ம்….அவங்க ரெண்டு பேரோட மனப்போராட்டத்தப் புரிஞ்சுக்கனும்னா மொதல்ல நம்ம வரலாற கொஞ்சம் தெரிஞ்சிருக்கனும்.’’
’’டேய்! ஏதோ 6 வருஷம் எனக்கு முன்னாடிப் பொறந்துட்டேன்றதுனால ஓவராப் பேசாத. எனக்கும் தெரியும். அப்பாவோட பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம். இங்க சென்னைல வீடு வாங்குனதும் தாத்தா பாட்டியும் இங்க வந்துட்டாங்க. அம்மாவோட அப்பா ராமேஸ்வரம் வழியா படகேறி சிலோன் போய் தேயிலைத் தோட்டத்தில வேல பார்த்தபோது அங்கேயே கல்யாணம் முடிச்சு சம்சாரியாகிட்டார். ஆனா அங்க அவ்வளவா இவங்கள மாதிரி இருக்கவங்களுக்கு மரியாத இல்ல. கள்ளத் தோணின்னு சொல்லி கிண்டல் பன்னுவானுங்க. போர்ல அவங்க ரெண்டு பேரையும் இழந்ததால அம்மா இனி அங்க இருக்க முடியாதுன்னு நெனச்சாங்க. அப்பா, அம்மா ரெண்டு பேரும் சந்திச்சிக்கிட்டது கனடாவுல. ‘பிரிடிஷ் கொலம்பியா யுனிவர்சிட்டி’ல. அப்பா விசிடிங் ப்ரொஃபஸர் – டேடா ஸைண்டிஸ்ட். அம்மா ஆந்திரபாலஜிஸ்ட். கல்கி, சாண்டில்யன்ல ஆரம்பிச்சு மணிரத்னம், அகத்தியன்ல முடிஞ்சது அவங்க காதல் கதை. அதுக்கு சாட்சியாத்தான் உன் பேர் அநபாயன்(கடல் புறா), என் பேர் அமுதா(கன்னத்தில் முத்தமிட்டால்). இது போதுமா? இல்ல இன்னொரு தலைமுறையோட கதையையும் சேர்த்துச் சொல்லனுமா?’’
உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா
வார்த்தையில் தெரியாத வடிவமும் நானா
நிழற்படம் அனுப்பிடு என் உயிரே
நிஜம் இன்றி வேறில்லை என்னிடமே
நலம் நலம் அறிய ஆவல்
உன் நலம் நலம் அறிய ஆவல்
’’நாம இரண்டு பேரும் சம்பளமில்லாத எடுபிடியா வேல செய்றோம். சில சமயம் அங்க…சில சமயம் இங்க. ஆனா நான் அவங்க சொன்னத மட்டும் செய்யல. நானும் அப்பப்ப சிலதைக் கேட்டு வாங்கிக்கட்டேன். அவளோதான். அதுனால ’நம்ம’ங்கறத நான் குடும்பக்கதையா பாக்கல. தமிழ் பேசுற ஒரு இனத்தோட வரலாறாப் பாக்குறேன். மானுடவியல் – மின்னணுவியல் இந்த உரையாடல்தான் அவங்களோட காதல் கோட்டைக்கு அஸ்திவாரம். யானையக் கட்டிப் போரடிச்சு விவசாயம் பண்ண கூட்டம், சாரை சாரையா தேயிலை தோட்டத்துக்கும், புகையிலைத் தோட்டத்துக்கும் கொத்தடிமையாப் போன வரலாறு. உலகத்துக்கே யானைங்கள மொத முறையா யுத்தத்துல பயன்படுத்தலாம்னு காண்பிச்ச வம்சாவழி இன்னைக்கு தொழில் நுட்பத்துக்கோ, சூத்திரத்துக்கோ காப்புரிமையில்லாம கார்ப்பரேட் கட்டப்பாக்களா வாழும் அவலம். ஏன் நமக்கு இந்த நிலை. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இதுதான் அவங்க இப்போ அதிகமாக் கவலப்படுற விசயம்.”
’’சரி, அரசாங்கங்களே முழி பிதுங்கி நிக்கறப்ப ஒரு தனிப்பட்ட நபரோ இல்ல ஒரு மொழி பேசுறவங்களோ என்ன செய்ய முடியும்? நீ இதப்பத்தி என்ன நினைக்கிற?’’
``முடியும்! எல்லா பெரிய இயக்கமும் ஒரு தனி நபர் கிட்டேர்ந்துதானே ஆரம்பிச்சுது? இப்ப நீ விளையாடுற லெகோ ஆட்டத்தையே எடுத்துக்கயேன். அதுல வெறும் 6 செங்கலை வச்சே 915,103,765 விதமான வடிவங்களக் கட்டமைக்க முடியும்னும்போது நீ ரோம கலோசியத்திலேர்ந்து தஞ்சை பெரிய கோயில் வரைக்கும் எல்லாத்தயுமே அதை வச்சே கட்டிடுவ. இல்லையா?’’
`` கட்டியிருக்கேன். கிட்டத்தட்ட உலக அதிசயங்கள் எல்லாத்தையுமே நான் கட்டிருக்கேன்.இதோ படமா எடுத்து அதையெல்லாம் வச்சிருக்கேன் பாரு. இப்ப பெரியகோயில் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்’’
``லெகோவோட தனித்தன்மை என்னன்னா எந்த நாட்டுல எந்த வருஷம் வாங்குனதா இருந்தாலும் அவை ஒன்னோட ஒன்னு பொருந்துறதுதான். இப்படிப்பட்ட ஒரு தரமுள்ள செங்கலச் செஞ்சிருக்கான் தமிழன் மத்த கண்டத்துல எல்லாம் நாகரிகம் தழைக்கும் முன்னாடியே. கீழடியே அதுக்குச் சாட்சி. அதனாலத்தானோ என்னவோ உனக்கே தெரியாம நீ கட்டின எல்லா கட்டிடத்துலயும் சிகப்பை அதிகமாப் பயன்படுத்திருக்கே.”
``எனக்கு செகப்பு ரொம்பப் புடிக்கும். அதனாலதான் அதிக சிகப்பு சேகரிச்சேன். ஆனா ஏன் எனக்குப் பிடிக்கும். அது எப்படி புடிக்க ஆரம்பிச்சிச்சுதுன்னெல்லாம் எனக்குத் தெரியல.’’
``சரி நீ கட்டின ஒவ்வொரு சாம்ராஜ்ஜியத்திலயும் இருக்கும் சிகப்புதான் அதிலிருக்கும் தமிழர்களோட பங்குன்னு வச்சிக்கயேன். அந்த செகப்பெல்லாம் ஒன்னாச் சேர்ந்தா?’’
``ஒரு தனி நாடே உருவாகிடும்னு சொல்றியா? ஒன்ன கலச்சுதான் இன்னொன்னக் கட்டனும்னா அப்புறம் பச்சை, மஞ்சள்னு அக்கு வேறு ஆணி வேறாப் பிரிஞ்சிடும். அதுல தனித்துவம்னு என்ன இருக்கப் போவுது.”
``இல்ல, நான் கலைக்கிறதப்பத்திச் சொல்லல. அது பொருளாதார அகதிகளைத்தான் உண்டுபண்ணும். ஒருத்தரோட தனித்துவமே ஒரு இனத்தோட பிரகடனமா மாறும்போது, இருந்த இடத்தில இருந்தே அவங்களுக்கான பங்களிப்பைச் செய்யலாம்னு சொல்ல வந்தேன். வரி அந்தந்த அரசாங்கத்துக்குப் போகும். ஆனா தமிழனோட சமூக முதலீட்ட(Social Capital) எந்த நாடும் மறுக்க முடியாது இல்லயா. அதை நமக்கு சாதகமாப் பயன்படுத்திக்கலாம்னு சொல்றேன்.”
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர்வண்ண எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் தானடி
ஊர்வண்ணம் என்ன கூறுவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி
``கேக்க நல்லாத்தான் இருக்கு. அப்ப எல்லாறையும் இருக்குற இடத்துலயே இருங்கடாங்கற. எக்ஸ்போர்ட் குவாலிட்டி மூளை எல்லாம் போனது போனதுதான்.இப்போ இங்க மிச்சமிருக்கிற 2ஆம் தர, 3 ஆம் தர மூளைங்கள வெச்சு முள்ளுதான் வெட்டமுடியும். உருப்படியா வேற என்னத்தச் செய்ய முடியும்னு நெனைக்கிற. இல்ல சுத்தமா மூளையையெல்லாம் கழட்டி ஒரு மூலையில வச்சிட்டு உடல் உழைப்பில மட்டும் கவனம் செலுத்துனாப் போதும்குறியா?’’
``’உலகமயமாக்கல்’ங்கர சித்தாந்தமே இத்தோட காலாவதியாகுருங்கறேன். முதல் தர மூளைங்க உள்ளவங்களுக்கு எப்பவுமே அதிகமாத் தன்னைத் தவிர வேறெதப் பத்தியும் பெருசா சிந்திச்சதில்ல. அடுத்தவன் பிரச்னைகளைப் பத்திப் பெருசா அவங்களுக்கு அபிப்பிராயமோ, அக்கரையோ இருந்தது இல்ல. சின்னச் சின்னப் பிரச்னைங்களத் தீர்க்குறதுல கவனம் செலுத்துறதையெல்லாம் அவங்க தகுதிக் குறைவா நினைக்கிறாங்க. அதனால அவங்கள்ளாம் அங்கயே இருக்கட்டும். ஒரு சாதாரணக் கொசு வலை, எலி கூண்டுக்கெல்லாம் கூடவா நாம இறக்குமதிய எதிர்பார்த்து இருக்குறது?’’
``முன்னோக்கிப் பாய்தல்ங்கற கோஷத்தோட எலி, ஈ, கொசு, குருவிங்களக் கூண்டோட அழிக்க ஆரம்பிச்ச நாட்டுல இருந்துதான் என்னான்னே தெரியாத இந்தக் கிருமி பரவியிருக்கு. குருவிங்க தன்னிறைவே இல்லாத பிராணிங்க. முதலாளித்துவத்தோட தூதுவர்கள்னு எல்லாம் வர்ணிச்சுச் சிட்டுக் குருவிங்கள அவங்க விரட்டி அடிச்சாங்க. கடைசில அதுங்க சாப்பிட்ட நெல், தானியத்தைவிட அதுங்க இல்லாததால பெருகிப்போன பூச்சிங்களால நாசமான பயிர்கள்தான் ஜாஸ்திங்கறது புரிஞ்சதுக்கப்புறம் சத்தமே இல்லாம குருவிக்குப் பதில் கரப்பான்பூச்சிங்களச் சேத்துட்டாங்க.’’
``ஈ, எறும்புக்குக் கூட சாப்பாடு வைக்கிற ஒரு வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிற நாம கொசு பேட்டையும், எலி மேட்டையும் சீனா கிட்டேர்ந்துதான் வாங்குறோம். எலி கூண்டிலேருந்து ஏவுகணை வரைக்கும் எப்படி அவனால சல்லிசாக் குடுக்க முடியுது. மாஸ் உற்பத்தி, காசுக்கேத்த தரம், வடிவமைப்பில் சிக்கனம், கடின உழைப்பு இதெல்லாம் மட்டும் காரணமா?’’
``இதையெல்லாம் அமெரிக்கா காரனும் பன்றானே. ஆனா அவனுக்கு கட்டுப்படியாகலையே. அது எப்படி?’’
``இவன் லாபத்தக் கொறச்சுக்கறான்?’’
உன் பணம் பணம் என் பணம் பணம், என் பணம் உன் பணம்
ஐ!
என் பணம் பணம் உன் பணம் பணம், உன் பணம் என் பணம்
ஐயோ!!
பணம், பணம், பணம். அந்தப் பணமிருந்தா தினம்
தினம், தினம், தினம் அந்தப் பணத்தத் தேடும் மனம்
``இல்ல, அவனும் கணிசமா லாபம் பாக்குறான்தான். ஆனா அமெரிக்காக் காரன் ஒரு பொருள மேல்தட்டுல இருக்க ஒருத்தனுக்கு மதிப்புக்கூட்டி வித்து பாக்குற லாபத்த இவன் அடித்தட்டுல இருக்குற100 பேருக்கு வித்துத் தன் லாபத்தை எடுக்குறான். எப்படிப் பார்த்தாலும் லாபம் லாபம்தானே. ஆனா இவனோட விளையாட்டே வேற.’’
``உலகப் பொருளாதாரமே கச்சா எண்ணெயோட ஏத்த இறக்கத்த நம்பியிருக்கும்போது சைனாக்காரன் பொருள ஒரு இடத்துலேருந்து இன்னொரு எடத்துக்கு அனுப்ப ரோட்டைவிட நீர்நிலைகளைத்தான் அதிகம் நம்புறான். தவிர ஒரு பொருளைத் தயாரிக்க அடிப்படைக் கட்டுமான வசதிகளோட இருக்கும் ஒரு அமைப்ப இங்க ஐ.டி காரங்களோட கோ-வர்க்கிங் ஸ்பேஸ் மாதிரி அவன் குறைந்த விலைல லீசுக்கு விட்றான். இது ரெண்டைத் தவிர அவன் பின்பற்றுகிற மத்த அம்சமெல்லாம் ஒரு கம்யூனிச நாட்டுக்கே உரித்தானவை.”
``எல்லா வஸ்துவையும் அண்டால செஞ்சு வச்சிக்கிட்டு கள்ளச் சந்தை மூலமா மத்த நாடுகள்ல உலவ விட்டு அவங்களோட பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வேலைய பல வருஷமா சீரும் சிறப்புமா செஞ்சுக்கிட்டிறுக்கான். ஆனால் இனி அது பலிக்காது. இந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நாம கந்தரப்பம் மாதிரி கவ்விக்கனும்.’’
பாட்டி இடையில் கதவைத் தட்டி ”பசங்களா! ஏதும் சமைக்கிறதா? இல்ல இன்னைக்கும் ஆர்டர் பண்ணப் போரீங்களா. காய்கரிக்கு சொல்லனும்.”
”இதோ 10ஏ நிமிஷம் பாட்டி. அத பத்திதான் பேசிக்கிட்டிருக்கோம். நான் அம்மா அப்பாவையும் கேட்டு சொல்றேன்”
``சோக்கா சொன்ன போ. நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம். அவங்க என்ன கேட்டாங்க.சரி! கம்மிங் பேக் டு தி டாபிக். இங்க நதி நீரை இணைக்கிறேன். கடல் நீரக் குடிக்கிறேன்னு சில குரூப்புங்க சுத்திக்கிட்டிருக்குது. இவ்வளவு கோடி ரூபா செலவில் இந்தத் திட்டம், அந்தத் திட்டம்னு சொல்லிக்கிட்டிருந்தவனுங்களோட கொட்டத்தையெல்லாம் அடக்குற மாதிரி 50 நாள்ல கூவமே தன்னால சுத்தமாகிடுச்சு. இவனுங்கள நம்பியா டெண்டர் விட சொல்ற. எப்பிடி வருவானுங்க பாரு கெணரக் காணமுன்னு.’’
``அதே தப்பத்தான் தாராளமயமாக்கல்ங்குற பேர்ல நாம் பண்ணோம். நான் மறுபடியும் உலகம் பூரா கிளை பரப்பக்கூடிய பெரிய தொழில் நிறுவனங்கள ஆரம்பிக்கணும்னு சொல்லல. அது யானை வளர்க்கிற மாதிரி. தீனிபோட்டு மாளாது. நம்மோட பலம் சேமிப்பு. நான் சொல்றது நம் நாட்டில் இருக்குற குறு\சிறு, மத்திய தொழில்க் குழுமங்களை உலகத்தரத்துக்குப் பொருள்களை உற்பத்தி செய்யற மாதிரி தயார் படுத்தணும்ங்கறதுதான். அப்படிச் செஞ்சா அவங்க எறும்பு மாதிரி விடாது எப்பவும் இயங்கிக்கிட்டே இருப்பாங்க. நாம பிராண்ட் வேல்யூவைப் பார்த்து அயல் நாட்டுப் பொருளை போக்குவரத்துக்கும் பகுமானத்துக்கும்தான் பெரும்பணத்தை செலவு பண்ணி வாங்குறோம்.’’
``கேப்பிடலிஸ்ட் பாதி, கம்யூனிஸ்ட் பாதி கலந்து செய்த கலவை நானுன்னு சொல்ற நிறுவனங்களா இருக்கனும்னு சொல்ல வரே. அது இங்கே சாத்தியப்படுமா?அரிஸ்ட்டாட்டிலோ யாரோ காண்டாமிருகத்தப் பாத்துட்டு குதிரை பாதி, யானை பாதி. இதுதான் சர்வ வல்லமை பொருந்திய யூனிகார்ன்னு சொன்னாரே அப்பிடி ஆகிடப்போகுது கதை.’’
``அப்படில்லாம் ஆகாது. நாம அமெரிக்காவ மாதிரி ஆகனும்னு நெனச்சோம்னா. பெரிய பிராண்டுகளைப் பட்டிதொட்டியெல்லாம் தண்டோரா போட்டுக் கொண்டுபோய்ச் சேர்க்கணும். அது ஒருவிதப் போர் அறிவிப்புதான். யானைய ஏவிவிட்டு எறும்புப்புத்த மிதிக்கிற மாதிரி பொட்டிகடைய்யெல்லாம் மிதிச்சு நசுக்கிட்டு வாங்குறவனுக்கு இது தேவையா, வசதிப்படும்மான்னெல்லாம் பாக்காம அவனுக்குக் கடன்குடுத்து அவன அதையெல்லாம் வாங்கவச்சு ஓட்டாண்டியாக்கனும்.’’
``அதே சீனாவாகனும்னு நெனச்சோம்னா திருட்டுத்தனமா பின்வாசல் வழியா மத்த நாட்டுக்குள்ள கரயான் புத்துமாதிரி பரவிச் சத்தமே இல்லாமச் சோலிய முடிக்கனும். இது ரெண்டுமே இல்லாம நாம நாமாவே இருந்து ஜெயிக்கனும்னா தயாரிக்கிறது சின்னத் துரும்பா இருந்தாலும், அதைச் செஞ்சு முடிக்கிறதுல நம்ம எறும்பா செயல்பட்டாத்தான் அது சாத்தியம்.
``பலம் பலவீனமெல்லாம் உவமை சரியாத்தான் இருக்கு. இங்கே ஒரே ஒரு விசயம்தான் இடிக்குது. நாம சம்பாதிச்சத கொஞ்சமாவது அனுபவிச்சு அதில் சந்தோசப்பட வேண்டாமா. சுருளிராஜன் ஊறுகா பாட்டிலப் பாத்துட்டே சாப்பிடற மாதிரி எத்தன நாளுக்கு வாழ்க்கையை இப்படியே ஒப்பேத்திக்கிட்டிருக்குறது. நாளைக்காக, நாளைக்காகன்னு நம்ம சேத்து வெக்கிறதையெல்லாத்தையும் லங்கர் கட்டய உருட்டுற மாதிரி உருட்டி மொத்தமா நம்மகிட்டயிருந்து எல்லாத்தையும் ஒரு நாள் உருவிட்டுதான் விடுவானுங்க. ’’
``எறும்புங்கற உதாரணத்த இங்க நான் சேமிப்புங்கற அர்த்தத்துல மட்டும் பயன்படுத்தல. நம்மோட சமூக அமைப்பு எப்படி இருக்கனுங்கறதுக்குமான உதாரணமாத்தான் அதைச் சொன்னேன். இப்ப இந்த சதுரங்கத்த எடுத்துக்க. இதிலிருக்குற சிப்பாயெல்லாம் பாக்கறதுக்கு ஒரே மாதிரியாயிருந்தாலும் இவை ஒவ்வொன்னுமே ஒவ்வொரு தனிப் படைக்குச் சமமானவை. ராஜாக்கு நேர் எதிர்ல இருக்கது வணிகர்கள், ராணிக்கு முன்னாடி மருத்துவர்கள், யானைக்கு முன்னாடி விவசாயி. ராஜா, ராணிக்கப்புறம் அதிக பலமுள்ளது யானைதான். ஏன்னா ஒரு சதுரங்கத்திலிருக்குற எல்லாக் கட்டத்துக்கும் அதால போக முடியும். ஒரு ராஜாவ மடக்க ஒரு சிப்பாயும் யானையும் இருந்தாலே போதும். அதே நேரத்துல ஒரு சிப்பாய அக்கரைக்குக் கொண்டு போய்ட்டோம்னா அதுக்கு ராணியோட பலம் வந்துடும்.”
``எறும்போட சமூக அமைப்பு கிட்டத்தட்ட அப்பிடிப்பட்டதுதான். அதுங்க சம்பந்தப்பட்ட ரெண்டு சாம்ராஜ்ஜியங்களுக்கு நடுவில சண்ட வந்தா வதைமுகாம் சித்ரவதைகள், இனப்படுகொலைகள் எல்லாம் அங்க நடக்காது. ரெண்டு சாம்ராஜ்ஜியத்தோட வேலைக்காரப் படையும் ஒண்டிக்கு ஒண்டி நிற்கும். அதில் நல்ல செழிப்பான, திடகாத்திரமான படை எதுங்கறது அதிலிருக்குற ஒரு சிப்பாயோட உடல்கட்டுலயிருந்தே தெரிஞ்சிடும். அந்தக் கூட்டத்துல நல்ல ஊட்டச்சத்துக்களை சாப்பிட்ட எறும்புங்க எல்லாம் இளவரசிகளா வளந்திருக்கும். அது ஒவ்வொன்னும் ரெக்க முளைச்சுப் பறக்குறப்போ அதுங்களாலயே ஒரு தணி சாம்ராஜியத்த உருவாக்க முடுயும்றது எதிராளிக்குப் புரிஞ்சதுமே அவை போர்லேருந்து பின்வாங்கிடும். இதுனால பெரிய அளவில் பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்படுது. அதையும் மீறித் தன்னோட வசிப்பிடத்த எதிரிப்படை தாக்க வருதுன்னா வேலக்காரப்படை தற்கொலைப்படையாச் செயல்பட்டுப் போரைச் சட்டுபுட்டுன்னு முடிவுக்குக் கொண்டுவந்துரும். போர்க்காலத்துல சாப்பாட்டக் கெடங்குல சேமிச்சா ஆபத்தாயிரும்முன்னு சில குழுக்கள் தன் தளபதிகளையே நடமாடும் கிடங்கா மாத்திடும்.”
`` ராணிதான் அந்தக் கூட்டத்துலயே பலசாலியா இருக்கும். சரியான இணை கெடச்சா ஒடனே ரெக்கைய உதுத்துட்டு முட்டையிட்டு அடைகாக்க ஆரம்பிச்சிடும். அதிகபட்சமா 30 வருஷம் வரைக்கும் வாழும் ராணி தன் ஆயுள் காலத்துல லட்சக்கணக்கான முட்டிடைகளை இடும். அது இறந்ததும் அடுத்த ராணியை அந்தக் குழு தேர்ந்தெடுக்கும். தனக்கான சரியான இணை கிடைக்காதப்போ தன்னைத்தானே நகலெடுத்து வெறும் வேலைக்காரப்படைய ஒரு தொகைமைக்காக உருவாக்கும். அப்படி உருவான படை ராணி செத்த உடனேயே நிலைகொலஞ்சுபோயிடும்.”
``போன தலைமுறையோட இல்லத்தரசிகள் தனக்கான சம்பளம்னு ஒரு தொகையை ஒதுக்கி வச்சு அதைக் கண்ணுக்குத் தெரியாத சேமிப்பாவும், முதலீடாவும் மாத்தினாங்க. அதுதான் நம்மள இவ்வளவு பொருளாதார நெருக்கடிகள்ளயும் இருந்து காப்பாத்தி நிலமையை சமாளிக்க வச்சிது. ஆனா வரும் காலத்தில் இதெல்லாம் பத்தாது. நம்ம தலைமுறையில படிச்ச பொண்ணுங்க, படிக்காதவங்கங்கற பாரபட்சமில்லாம எல்லாரும் குடும்பப் பராமரிப்பைத்தாண்டி ஆண்களுக்கு சமமா பணியமர்த்தப்படனும், தொழில் தொடங்கனும். அதுதான் குடும்பத்தைத் தாண்டி நாட்டோட நம்ம பொருளாதாரத்தப் பலப்படுத்தும். அதுக்கு ஆண்களும், மத்த குடும்ப உறுப்பினர்களும் ராணியோட வேலைக்காரப் படையா மாறனும். இந்த ஊரடங்கு காலத்துல தாங்களும் ஓரளவுக்காவது வீட்டு வேலைகள் செஞ்சிருப்பாங்க. அதுக்குப் பழக்கப்பட்டிருப்பாங்க. அதை அப்படியே தொடர வேண்டியதுதான்.”
``ஆமாம்பா உலகத்தின் சிக்கலான புதிர்களுக்கெல்லாம் மென்பொருள் துறையில இப்போ Ant Colony Optimisation Algorithm வச்சுத்தான் தீர்வு கண்டுபிடிக்கிறாங்களாமே. எறும்புங்க எப்படி தன் இரையை அடைவதற்கான சிறந்த பாதை எதுன்னு கண்டுபிடிக்குதுங்கறதோட மறு உருவாக்கம்தான் இது. எறும்பு இரைதேடிப்போகும்போது pheromoneங்கற திரவத்த சுரத்துக்குட்டே போகும். போகும் பாதைல சாப்பாடு இருந்துச்சுனா திரும்ப வரும்போதும் அதே திரவத்த சுரத்துக்குட்டே வரும். இல்லாட்டி இன்னொரு பாதையில இரையைத் தேடி பயணப்படும். ஒவ்வொரு குழுவுக்கும் திரவம் ஒவ்வொரு வாடையுடையதா இருக்குறதால அடுத்தடுத்து இரைதேடப்போகும் எறுப்பெல்லாம் அதே வழித்தடத்துல போகும். நடுவுல ஏதாச்சும் தடங்கல் வந்தாலோ, பெரமோன் திட்டை யாராவது அழிச்சு விட்டிருந்தாலோ தாற்காலிகமா அந்தத் தடையச் சுத்திப்போகுமே தவிர சீக்கிரமே புதிய சிறந்த பாதைய வகுத்திடும். இந்த நடைமுறையதான் Ant Colony Optimisation Algorithm ஒரு சிக்கலுக்குத் தீர்வு கண்டுபிடிக்கச் செய்யுது. சதுரங்கத்துலயே மிகப்பெரிய சவாலான Knights Tour புதிரைக்கூட இந்த ACOவை வச்சு எளிமையாத் தீர்க்கலாமாம்.”
``உலகத்துல ஒட்டுமொத்தமாப் பார்த்தா அதிகபட்சமா பத்து லட்சம் யானைகள் (பெரும் நிறுவனங்கள்) இருக்கலாம். ஆனா பூமிப்பந்தோட மேல்பரப்பிலுள்ள அத்தனை ஜீவராசிகளையும் ஒரு தராசில் வச்சு எடைபோட்டா எவ்வளவு கோடி கிலோ எடை வருமோ அதில் 20% எடை எறும்புகளுடையது(சிறு\குறு நிறுவனங்கள்). 1,000,000,000,000,000(1 மில்லியன் பில்லியன்). கிட்டத்தட்ட இது உலக மக்களின் ஒட்டுமொத்த எடைக்குச் சமம். இது மொத்த யானைங்களோட எடையைப்போல 15000 மடங்கு எடையுள்ளது.”
``யானை எளச்சா நல்லா இருக்காதுன்னு நினைக்குற அரசு எறும்புக்கெல்லாம் என்ன பெரிய பசி இருக்கப்போவுதுன்னு அதை உதாசீனப்படுத்திட்டுத் தொடர்ந்து எறும்புப்புத்தக் கலைச்சுட்டு யானைக்குச் சோறுபோடுது. ஆனா Elephant ல இருந்து Ant ஐ எடுத்துட்டோம்னா எலிதான் மிஞ்சும்கிறதை அவங்க இன்னும் உணரல. அதுக்குன்னு யானைகளோட சமூக முதலீட வேண்டாம்னு சொல்ல முடியாது. அதுங்களாலதான் புதுப் பாதைய உருவாக்க முடியும். வெள்ளம் வரும் முன்னாடி யானைங்க வெட்டுன பள்ளத்துள தேங்குன தண்ணியத்தான் மத்த ஜீவராசிங்க உபயோகிக்குது .”
``ஒரு போர்னு வந்தா ஒரு யானையால ஒரே மிதில ஆயிரம் எறும்புங்கள சாகடிக்க முடியும்னு வச்சுப்போம். ஆனா ஆயிரம் எறும்புல இருக்குற ஒரு எறும்பு அந்த யானையோட காதுக்குள்ள போயிட்டா அதுக்கப்புறம் அந்த யானையோட எலும்புகூட மிஞ்சாது. அது நடக்காம இருக்கனும்னா நாம பெருசா ஒன்னும் செய்யத்தேவையில்லை. எறும்புக்கு வீட்டசுத்தி லக்ஷ்மன் ரேகா கோடு போட்றத விட்டுட்டு வாசல்ல மறுபடி அரிசிமாவு கோலம் போட ஆரம்பிச்சம்னாலே போதும்.”
அநபாயன் சொன்னதை அமுதா அசைபோட்டபடியே வெளியில் வந்தாள். அம்மா, அப்பா அறை கதவு மெல்லத் திறக்க பாட்டு சப்தம் முன்பைவிட பலமாகக் கேட்டது. அனேகமாக அங்கேயும் ஒரு முடிவை எட்டியிருப்பார்கள் என்பதை உத்தேசித்தவாரே பாட்டியை அழைத்தாள்.
”இன்னிக்கு வெளில வாங்கல பாட்டி. ஈ-தோட்டத்துலயே காய் சொல்லிடலாம். என்னென்ன வேணும்னு சொல்லுங்க”
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்
ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி
தற்சார்பு வாழ்க்கை
~கார்த்திகேயன் புகழேந்தி(8939738491)
வானவில் புத்தகாலயம்(vanavilputhakalayam@gmail.com)
Comments